Sunday, January 26, 2014

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?

பேரா. அண்ணாமலையின் கட்டுரை மொழியார்வங் கொண்ட எல்லாத் தமிழராலும் படிக்கப் படவேண்டிய ஒன்றாகும்.
 
தமிழ் நம் மாநிலத்தில் ஆட்சி மொழியாக, அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக, வணிக மொழியாக, கல்வி மொழியாக, நாம் எல்லோரும் அன்றாடம் பயன்படுத்தும் மொழியாக  ஆகாவிட்டால் அழிந்துவிடும் என்று என்னைப் போன்றோர் கூறுவதைக் கேட்காவிட்டாலும், மொழியியற் பேராசிரியர் கூறுவதையாவது படித்து உணரலாமே? அவரவர் புலங்களில், பதிவுகளில், மடற்குழுக்களில் இதைப் பற்றிப் பேசலாமே? ஒரு பொதுக்கருத்தை எடுத்துக்கூறி இந்தத் திராவிட ஆட்சியாளர்களின் போக்கை  மாற்றலாமே?
 
இந்த பாழாய்ப் போன ஆங்கிலத்தைக் கட்டிக்கொண்டு எத்தனை நாள் மாரடிப்பது? அந்தக் காலத்துச் சங்கதம் போல் இந்தக் காலத்தில் ஆங்கிலம் ஆகிக் கொண்டிருக்கிறது. நாம் யாரும் உணர மாட்டேம் என்கிறோம். நாமே நம் தலையைக் கொடுத்து அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். தமிழைப் பயன்படுத்துவது குறைந்துகொண்டே போகிறது. தமிங்கிலம் என்னும் கிரியோல் மொழி உருவாகிக் கொண்டிருக்கிறது. நம் இளைஞர்கள் “தமிழ் பேச, எழுதத் தெரியவில்லை” என்று சொல்லத் தலைப்பட்டுவிட்டார். நாமும் ”record dance" பார்த்துக் கைதட்டிக் கொண்டிருக்கிறோம். கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினாற் கைகொட்டிச் சிரியாரோ?  மேடைகளில் கவலுற்று இதுபற்றிப் பேசுவோர் எங்கே என்று தேடவேண்டியிருக்கிறது.
 
படித்த அறிவுய்திகளே இதற்கு முற்றிலும் காரணமாவர். 
 
அன்புடன்,
இராம.கி.

From: E. Annamalai
Sent: Sunday, January 26, 2014 10:05 AM
Subject: [ctamil] Verncaularization


I posted in the list some time ago about the danger of Tamil becoming a vernacular language. The full article (and articles by others on language endangerment) can be seen in the e journal Language Endangerment and Preservation in South Asia, that is available  online.It is downloadable.
 

2 comments:

Unknown said...

தமிழால் என்ன பயன் எனத் தமிழன் தமிழை என்றோ தூக்கி எறிந்து விட்டதாகவே தெரிகிறது ஐயா.
- தமிழில் படித்து என்ன பயன் என்றும் கேட்கின்றனர்,
- தமிழில் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்கின்றனர்.
- குறைந்தபட்சம் தமிழைத் தட்டச்சு செய்யவே ஆங்கிலத்தை நம்பி இருக்க வேண்டிய இந்தக் காலத்தில் தமிழை மட்டும் வைத்து என்ன செய்யமுடியும் என்று கேட்கின்றனர்,
- பாருங்கள் ஒரு குளிர் சாதன பெட்டியை பற்றித் தமிழில் தெரிந்துகொள்ளலாமென இணையத்தில் தேடினால் குளிரில் நிற்கும் நடிகைகளின் படங்கள் தான் கிடைக்கிறது, தமிழில் அறிவியல் செய்திகள் என்பதே குறைவு, இப்படி ஒரு நிலையில் தமிழை மட்டும் நம்பினால் எங்கள் நிலைமை என்னவாகும் என்றும் கேட்கின்றனர்.
- அரசுகளே தமிழைத் தள்ளிவைத்துவிட்டு அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தை வைத்து அழகு பார்க்கும் போது எங்களை எங்களைக் குற்றஞ்சொல்லி என்ன பயன் என்றும் கேட்கின்றனர்.

ஒரு காலத்தில் ஹிந்தி என்றால் கொதித்தெழுந்த தமிழன் இன்று தன் குழந்தைகளின் விருப்ப பாடமாக ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை எடுக்கக் காரணம் அந்த மொழிகள் அவர்களின் தேவையைப் பூர்த்திச் செய்வதாகக் கருதுகிறான். ஏன் தமிழால் பூர்த்திச் செய்ய முடியவில்லை. நாமும் நம் அரசுகளும் அந்த லட்சணத்தில் தமிழை வைத்திருக்கிறோம். உள்நாட்டிலேயே தமிழை வைத்து ஒன்றும் செய்யமுடியவில்லை, இதில் தமிழை எங்குப் போய்ப் பரப்புவது எப்படிப் பரவும்! வளரும்!. அவப்போது இணையத்தில் வரும் கட்டுரைகள் வேறு "தமிழ் சாகாது... வளர்கிறது....மிளிர்கிறது" என்று எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. உண்மையில் நான் சொல்வதற்கு மன்னிக்கவேண்டும் ' இறந்து கொண்டிருக்கும் தமிழுக்கு மருந்துக்குப் பதில் பால் தான் ஊற்றிகொண்டிருக்கிறோம்".

பண்டைய காலங்களில் தமிழ் அரசுகள் சங்கம் வைத்து தமிழை வளர்த்தனர், பரப்பினர். ஆனால் இன்று தமிழும், தமிழனும் தேர்தலின் போது வாக்கு போட மட்டும் போதும் என அரசுகள் நினைக்கின்றன. வெளிநாட்டு/மற்ற நாட்டு தமிழர் அரசுகள் தமிழுக்குக் கொடுக்கும் மதிப்பு, மரியாதை கூடத் தமிழ்நாடு என்று பெயரை வைத்திருக்கும் நாம் கொடுக்க மறுக்கிறது. அங்கு உள்ளவர்களுக்கு "நம் தமிழ்! நம் இனம்! என்ற தீ இருக்கிறது". இங்கும் இருக்கிறது அந்தத் தீ.... ஆனால் தண்ணீர்கொண்டு அனைக்கப்படுகிறது.

இனிமேலாவது கூடி எதாவது உறுதியான செயல்பாடுகள் எடுத்தால் ஒழிய தமிழைக் காப்பாற்ற முடியும். இல்லையெனில் தொன்மையான மொழி என்று சொல்லிக்கொண்டே இலத்தினுக்கு ஏற்பட்டிருக்கும் கதி தான் நமக்கும் ஏற்படும்.

(தொடுப்பில் குறைகள் இருந்தால் மன்னிக்கவும்)

Unknown said...

அய்யா தங்களின் பதிவை படித்ததும் கொஞ்சம் அதிகமாகவே, இந்தப் பொறுப்பற்ற மக்கள், பொறுப்பற்ற அரசு நினைத்து திட்டி தீர்த்துவிட்டேன். யாரிடம் தான் தமிழின் இன்றைய நிலமையைப் பற்றிப் புலம்புவது என்று தெரியவில்லை.

என் முதல் பின்னூட்ட கருத்துக்கள் சபையினர் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என எண்ணினால் அதை நீக்கிவிடுங்கள், தவறு ஒன்றும் இல்லை.

அன்புடன்
இராசு.சரவணன்