Sunday, November 12, 2006

பின்னூட்டுக் கேள்விகள் - 2

helicopter யை உலங்கு வானூர்தி என்று ஈழத்தார் அழைப்பது பற்றி ஒரு நண்பர் கேட்டிருந்தார்.
--------------------------
உலங்கு வானூர்தியை வேறு சொல்லால் அழைக்கமுடியுமா என்று கூறவும். ஏனெனில் தும்பியின் வடிவமான உலங்குவானூர்தியைத் தும்பி சம்பந்தப்பட்ட சொல்லால் அழைத்தால் நன்றாக இருக்கும் அத்தோடு உலங்கு வானூர்தி என்பது நீண்ட வார்த்தையாக உள்ளது.
-------------------------

இராம.கி மறுமொழி:

உலங்கு வானூர்தி என்ற சொல்லை ஈழத்தார் கட்டுரைகளிலும், பதிவுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் அதற்கும் helicopter -க்கும் உள்ள தொடர்பை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உலங்கு என்ற சொல்லை அகரமுதலிகளில் தேடிப் பார்த்தால், வேறு ஏதேதோ பொருட்பாடுகள் (திரண்ட கல், கொசு, புழு, திரட்சி, வலிமை, துன்பம், பிணம், பட்டாடை, வாசல், நீர், காற்று, அகற்சி) போடப்பட்டு இருக்கின்றன. ஈழத்தில் இந்தச்சொல் எப்படி வந்ததென்று தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது. என்னுடைய பரிந்துரைக்குப் போகுமுன் அந்தச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய helix என்ற சொல்லையும் சரியான படி புரிந்து கொள்ளுவோம்.

Helicopter

1861, from Fr. helicoptere "device for enabling airplanes to rise perpendicularly," thus "flying machine propelled by screws." The idea was to gain lift from spiral aerofoils, and it didn't work. Used by Jules Verne and the Wright Brothers, the word transferred to helicopters in the modern sense when those were developed, 1920s. From Gk. helix (gen. helikos) "spiral" (see helix) + pteron "wing" (see petition). Nativized in Flemish as wentelwiek "with rotary vanes." Heliport is attested from 1948, with second element abstracted from airport.

Helix

1563, from L. helix "spiral," from Gk. helix (gen. helikos), related to eilein "to turn, twist, roll," from PIE base *wel- "to turn, revolve" (see vulva).

தமிழில் spiral என்பதைப் புரி என்ற சொல்லால் சொல்லுகிறோம். வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு என்ற சொல்லாட்சிகளைப் பார்த்தால் அது புரியும். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension)மட்டுமே விரியும். helix என்பதோ, குத்துப் பரிமானத்தில் (vertical dimension) விரியும்.

தமிழில் சுழிப்பு என்பது வட்டத்தை முதலிற் குறித்தாலும் வேகமான நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படும் சுழிகையாகவே அது காட்சியளிக்கும். "அந்தச் சுழலுக்குள் மாட்டிக் கொண்டான்" என்னும் போது நம்மை அறியாமல் helix என்பதைப் பேச்சில் உணர்த்துகிறோம். சுல் என்ற வேரில் இருந்து சுழி எழுந்தது போல சுரி என்ற இன்னொரு சொல்லும் அதே பொருளில் எழும். சுரிகுழல் என்பது helical ஆகச் சுருண்டு கொண்டு கிடக்கும் முடிக்கற்றையைக் குறிக்கும். சுரிமுகம் என்பது குத்துத் திசையிலும் சுருண்டு கொண்ட சங்கைக் குறிக்கும். நத்தையின் கூட்டைக் கூடச் சுரிமுகம் என்று அழைப்பர். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw)என்று சொல்லும் போது திருகு என்ற சொல்லும் helical motion - யைக் குறிக்கிறது. முறுக்கு என்ற சொல்லும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இந்தக் கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகை என்பதையே helix-க்கு இணையாக வைத்துக் கொள்ளலாம்.

இனி helico+pter என்பதில் வரும் pter என்பதைப் பட்டம்>பத்தம்>பத்ர = pter இலை, இறகு என்ற வளர்ச்சியோடு பொருத்தலாம். இங்குமே தொடக்கம் தமிழாயும், முடிவு சங்கதமாயும் இருக்கும் இருபிறப்பிச்சொல் பெறப்படும்.

இன்னொரு வகையில் பார்த்தால் படபட என்ற இரட்டைக்கிளவிச் சொல் அசைதல் என்ற பொருளைக் கொடுப்பதைப் பார்க்கலாம். படபட என்ற ஒலி பொதுவாக வடக்கே போகப் போக பதபத என்று ஆகும். தெற்கே வரவரப் பறபற என்று ஆகும். படபட எனல், பதபத எனல், பறபறத்தல் ஆகிய எல்லாமே அசைத்தல், விரைவாகச் செல்லுதல் என்ற பொருள்களைக் குறிக்கும். தமிழில் பறத்தல், பறவை, பறல் என்ற சொற்கள் எழுந்தது இப்படித்தான். பக்கச் சிறகுகளை படபட என்று அடித்து அசைப்பதால் தானே பறக்க முடிகிறது?
பக்பக் என்ற இரட்டைக் கிளவிக்கும் அடித்துக் கொண்டது, அசைத்துக் கொண்டது என்றே பொருள் கொள்ளுகிறோம். "மனம் பக் பக் என்று அடித்துக் கொண்டது". பக்கு எனல் என்பதும் விரைவுக் குறிப்பைத் தரும்.

பக்கு>பக்கம் = பறவையின் சிறகு
பக்கம்>பக்ஷம் (சங்கதம்) = பறவையின் சிறகு
பக்ஷி = பறவை
பக்கம்>பக்தம் (சங்கதம்)>பத்தம் (பாகதம்) >பத்ரம் (சங்கதம்)
பத்ரி (சங்கதம்) = பறவை
படபட> பதபத>பதகம், பதங்கம், பதசம், பதமம் (நாலும் சங்கதம்) = பறவை

தமிழ், சங்கதம், பாகதம் ஆகிய மூன்றுமே ஒன்றை ஒன்று சொல்லாட்சிகளில் ஊடுருவி இருக்கின்றன. இதை விடுத்து "எல்லாமே சங்கதம் என்ற மேட்டில் இருந்து தமிழ், பாகதம் என்ற மடுக்களுக்குப் பாய்ந்தன" என்ற ஆளுமை உணர்வு பலருக்கும் பரந்து கிடக்கிறது. குறிப்பாக பெருவோட்ட (mainstream) இந்தியவியலிலும், மொழியியலிலும் இது ஆழப் பதிந்திருக்கிறது. ஒழுங்கான புரிந்துணர்வுக்கும், ஆய்வுக்கும் அது வழி வகுக்காது. எத்தனை முறை தான் சொல்லுவது?

பறத்தல் என்ற வினைச்சொல்லில் இருந்து இன்னொரு ஈற்றை வைத்து பறனை (plane) என்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் பரிந்துரைத்தார். சிறிய சொல்லான அதைப் பலரும் புழங்கிக் கொண்டு இருக்கிறோம். அதை ஒட்டி வான்பறனை (aeroplane) என்றும் சொல்லிவருகிரோம். வானூர்தி என்பதை aircraft என்பதற்கு இணையாகப் பயன்படுத்துகிறோம்.

சுரிப் பறனை என்ற சொல் helicopter க்கு இணையாக அமையும். இன்னும் சுருக்க வேண்டுமானால் சுரினை என்றே சொல்லலாம். (தும்பியின் வடிவு என்பதைக் காட்டிலும், சுரிப் பறனை சுரிகை இயக்கத்தால் பறக்கிறது என்பது முகன்மையான செய்தி. தும்பி என்பதோ, பறவைகளைப் போலச் சிறகை அசைத்தே பறக்கிறது. வெறும் வடிவ ஒற்றுமை மட்டுமே பார்ப்பது இங்கு சரிவராது.)

மேலும் பறனையும், சுரினையும் ஒரே போல அமையும்.

அன்புடன்,
இராம.கி.

11 comments:

Anonymous said...

திரு. இராமகி அவர்கட்கு

ஐயா,

உங்களுக்கு விளக்கமளிக்குமளவுக்குத் தமிழில் புலமை கிடையாது, இருந்தாலும் முயற்சிக்கிறேன். ஈழத்தார் உலங்கு வானூர்தி என்று helicopter ஐ அழைப்பதற்குக் காரணம் அதன் உச்சியில் சுழலும் விசிறிகளின் அடிப்படையில் தான் என்பது என்னுடைய கருத்து. ஈழத்தமிழர்கள் உலங்கு என்ற சொல்லைச் 'சுற்றுதல்' அல்லது 'சுழலுதல்' அல்லது சுழலும் காற்றாடிகளையுடையது என்ற கருத்தில் பாவிக்கிறோம் , அதாவது உலங்கும் - சுழலும் காற்றாடிகளை உச்சியில் கொண்ட வானூர்தி என்ற கருத்துப் படவே உலங்கு வானூர்தி எனக் helicopter ஐ அழைக்கிறோம்.

உலங்கு என்ற சொல்லுக்குத் தமிழகராதியில் (திரண்ட கல், கொசு, புழு, திரட்சி, வலிமை, துன்பம், பிணம், பட்டாடை, வாசல், நீர், காற்று, அகற்சி) பல பொருட்பாடுகள் உள்ளதாகக் கூறியுள்ளீர்கள், காற்று என்ற சொல்லின் தொடர்ச்சியாக காற்றில் சுழலுதல் என்பதற்கு நாங்கள் உலங்குதல் என்ற சொல்லைப் பாவிக்கிறோம் என நினைக்கிறேன். அதிலிருந்து வந்தது தான் உலங்கு வானூர்தி.

PRABHU RAJADURAI said...

நன்றி!

இப்புதிய வார்த்தைகளுக்கு! பல வார்த்தைகளை தங்களிடம் கற்றுள்ளேன்.

PRABHU RAJADURAI said...

Act, Rule, Regulation, Bye Law, Condition போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமான தமிழ் வார்த்தைகள் கூறினால், பயனுடையதாக இருக்கும்.

Anonymous said...

சுரினை என்ற சொல் நன்றுதான். ஆனால் உலங்குவானூர்தி என்பதை ஒத்தசொல்லாக வைத்திருக்க முடியாதா? ஆரூரன் சொன்ன கருத்தின்படி, உலங்குவானூர்தியை உலங்கு ஊர்தி, உலங்கூர்தி என்று அழைக்க முடியாதா நண்பரே?

உங்களுக்கு நேரம்வரும்போது, தமிழர் படை ஆணத்திகளின் பெயர்களையும் இங்கு தந்துவிடுங்கள் நண்ப

நன்றி

Anonymous said...

சுரினை என்ற சொல் நன்றுதான். ஆனால் உலங்குவானூர்தி என்பதை ஒத்தசொல்லாக வைத்திருக்க முடியாதா? ஆரூரன் சொன்ன கருத்தின்படி, உலங்குவானூர்தியை உலங்கு ஊர்தி, உலங்கூர்தி என்று அழைக்க முடியாதா நண்பரே?

உங்களுக்கு நேரம்வரும்போது, தமிழர் படை ஆணத்திகளின் பெயர்களையும் இங்கு தந்துவிடுங்கள் நண்ப

நன்றி

இராம.கி said...

அன்பிற்குரிய ஆரூரன்,

உங்கள் விளக்கம் படித்தேன். உலங்கு என்பது காற்று என்ற பொருள் வந்தது, உலவுதல் என்ற காரணத்தால். ஆனால், உலங்குதல் என்ற வினைக்கு அசைதல் என்ற பொருளை இன்னும் அகரமுதலிகளில் தேடிக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தாலும், அது பறனை போன்ற வானூர்தியை மட்டுமே பொதுப்பொருளாய் காட்டக் கூடும் அல்லவா? helicopter என்ற விதப்பான பொருள் எப்படி வந்து சேரும்? யாரேனும் இன்னும் அதிக விளக்கம் தந்தால் நன்றாக இருக்கும்.

அன்பிற்குரிய ராஜதுரை,

அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டு இருங்கள்.

Act, Rule, Regulation, Bye Law, Condition போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமான தமிழ்ச் சொற்களை எழுதுகிறேன்.

அன்பிற்குரிய சடையன் செம்படையன்,

இன்னும் ஒரு புனைப்பெயரா? வெள்ளம் போல் புனைப்பெயர் வருகிறதே? :-)

உலங்கூர்தி என்று அழைக்கலாம் தான். (வானை வெட்டி எறியுங்கள்.)

முதலில் சொல்லாக்கங்கள் பற்றி ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதில் இவர், அவர் என்று யாருக்கும் முன்னுரிமை கிடையாது. நாம் கூறிய சொற்களைத் தூக்கி எறிந்து இன்னொன்றை மக்கள் ஏற்கலாம். ஒவ்வொன்றும் பரிந்துரையே. ஏற்பதும், ஏற்காததும் மக்களின் உகப்பு.

ஈருருளி போய், மிதிவண்டி நிற்கும் என்று யாராவது எதிர்பார்த்திருப்பார்களா?

நான் கூறிய சொல்லையே எல்லோரும் புழங்க வேண்டும் என்று நான் தொங்கிக் கொண்டு இருப்பதில்லை. என் பரிந்துரை உங்களுக்குப் பிடித்திருந்தால், நீங்கள் பயன்படுத்துவீர்கள்; இன்னொருவர் உங்களிடமிருந்து செய்வார். அவரிடமிருந்து மேலும் ஒருவர். இப்படி அது பரவக் கூடும். அவ்வளவுதான்.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//அன்பிற்குரிய சடையன் செம்படையன்,

இன்னும் ஒரு புனைப்பெயரா? வெள்ளம் போல் புனைப்பெயர் வருகிறதே? :-)//அடுத்த புனைபெயரும் வந்துவிட்டது பார்த்தீர்களா? ;-)

//உலங்கூர்தி என்று அழைக்கலாம் தான். (வானை வெட்டி எறியுங்கள்.)//

நன்றி நண்பர் இராமகி.

உலங்கூர்தி என்பதும் நன்றே. அவ்வாறெனின் ஆரூரன் தந்த விளக்கத்துக்கு அமைய அந்த சொல் உருவாகியிருக்கலாம். சொல்லை உருவாக்கியபோது வான் என்ற சொல்லை மிகுதியாச் சேர்த்துவிட்டார்களோ?

நண்பர் இராமகி 'Stealth' என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம்? stealth technology போன்றதை.

நீர்மூழ்கிக்கப்பல்(submarine) என்பது சரியான பதமா? marines (USA marine), what is the Tamil for it?

தொலைக்காட்சியை எவ்வாறு சுருக்கி அழைக்கலாம்? தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற சொற்கள் ஆங்கிலத்தில் உள்ளதின் மொழிப்பெயர்ப்பாகவே தோன்றுகின்றன.

ஏய்ர் கிறாவ்ற் கறீயர் (air craft carrier) என்பதை எவ்வாறு அழைக்கலாம்?

Squadron, Battalion, Brigade என்பவற்றை எவ்வாறு அழைக்கலாம்?

பரசூட்டுக்குத் (parachute) தமிழ் என்ன?

அக்கவுன்டிங் தமிழில் எவ்வாறு அழைக்கப்படும்? (Accounting and Algebra?)

ஸ்கேற்றிங்(skating) (பனிச் சறுக்கல்?), ஸ்கியிங் (மலைச் சறுக்கல்?) (skiing)

சேர்வ் (surf) எவ்வாறு தமிழில் அழைக்கப்படும்?

கரியமிலவாயு என்று கார்பன் டையாக்சைட்டை (CO2) அழைத்தால், கார்பன் மொனோக்சைட்டை(carbon monoxide, CO) எவ்வாறு அழைப்பது?

ஓசோன் எவ்வாறு தமிழில் அழைப்பார்கள்? (நச்சுயிரி மண்டலம் என்பது சரியா?) (ozone, O3)

மைக்கிறோ ஓவனை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? (micro oven)

ஏய்ர் கொண்டிசனரை எவ்வாறு தமிழில் அழைக்கலாம்? (air conditioner)

எற்ஸ்றே கதிரை எவ்வாறு அழைக்கலாம்? (x-ray)

தொப்பிக்குத் தலையணி (தலையணை அல்ல) சரியான தமிழா? (hat, cap?)

கோல்ப் விளையாட்டை எவ்வாறு அழைக்கலாம்? (GOLF; gentlmen only ladies forbidden)

செல்பேசி சார்ஸர் (cellphone charger)
கீற்றர் (heater)
வீல் நாற்காலி (wheel chair)
ரையர் (tyre)
ஸ்-ரீயறிங் வீல் (steering wheel)
றிம் (car rim)

பெற்றோல்(காசோலின்)(petrol;gasoline)[மண்நெய்???]
ஓய்ல் (oil)
டீசல் (diesel)
சொக்கலைட் (choclate)
கேக் (அப்பம்?)
பாண் (கோதுமை அப்பம்?)
ஸ்பகிற்றி (spaghetti?)

nayanan said...

அன்பின் ஐயா,
தங்கள் பதிவினைப் பார்த்து சில வாரங்கள் ஆகிவிட்டன.
காலத்தாழ்வான பின்னூட்டுக்கு மன்னிக்கவும்.

சுரிப்பறனை என்ற சொல் மிக உகப்பாக இருக்கிறது.

பறனை என்பதனை பொதுச் சொல்லாகக் கொண்டு அதன்
வகைகளுக்கு அருமையாக பெயர்கள் அமைந்து வருவதாகக் கருதுகிறேன்.
jet, concord, glider போன்றவற்றிற்கும் சொற்கள் அமையும் என்று கருதுகிறேன்.

Compiler என்பதற்கான பொதுளி என்ற பொருளைப் பற்றி சிந்துத்து வருகிறேன்.
குழைத்தல், திரட்டல், மாற்றல், பொதுமைப் படுத்தல், தொகுத்தல், இணைத்தல்
போன்ற பல பணிகளை அது ஒருங்கே செய்கிறது.

இதன் பொருளை decompiler, assembler, disassembler, interpreter,
JIT-compiler போன்ற குழுச் சொற்களோடும் பொருத்திப் பார்த்து வருகிறேன்.
(மிகக் கடினமாகத்தான் இருக்கிறது).

வாகைகளில் அப்பொழுது பேசியது நன்கு நினைவிருக்கிறது. மீண்டும்
அதனை நான் தொடர வேண்டியது இருக்கிறது.

மிக்க நன்றி இந்தச் சொற்களுக்கு.
அன்புடன்
இளங்கோ

தமிழ் அகராதி said...

cellphone charger = அலைபேசி/கைபேசி மின்னூட்டி

heater (air blowing type) = அனல்பெட்டி
heater (general) - வெந்தி, உ.தா அறைவெந்தி (room heater)

steering wheel - சக்கரம் திருப்பான்

tyre - உருளிப்பட்டை

retreading - மறைக்கிழித்தல்

http://geocities.com/tamildictionary

செல்லி said...

ஐயா

ஆரூரன் சொன்ன மாதிரியான ஒரு விளக்கத்தை பிபிசி அற்விப்பாளர் சங்கர் அண்ணா அவர்கள் 1983 இலங்கையிலேற்பட்ட கலவரங்களின்போது செய்திகளில் உலங்கு வானூர்தி என்று குறிப்பிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அது ஈழத்தவருக்குப் பழக்கமான சொல்லாகிவிட்டது. அங்கு இந்தச் சொல் அநேகமாக இப்போ எல்லாருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது.
எனவே, இனி ஒரு புதுச் சொல் புழக்கதில் எடுபடுமா என்பது கேள்விக் குறிதான்
நன்றி.

Anonymous said...

GOLF - குழிப்பந்தாட்டம் (SURA Eng Tam dictionary)
CHOCOLATE - மரபா (பழமையான தமிழ்ச் சொல்)
CAKE - இனியப்பம்
SPAGHETTI - நூலப்பம்
NOODLES - நூலடை
X-RAY - ஊடுக்கதிர் (சென்னை விமான நிலையம்)
MICROWAVE - அலையடுப்பு
BRIGADE - கவாத்து

www.geocities.com/tamildictionary/