Tuesday, March 26, 2024

mutual

 mutual (adj.) late 15c., "reciprocally given and received," originally of feelings, from Old French mutuel (14c.), from Latin mutuus "reciprocal, done in exchange," from PIE root *mei- (1) "to change, go, move," "with derivatives referring to the exchange of goods and services within a society as regulated by custom or law" [Watkins

நம் திருமணங்களில் மொய் எழுதுவோம். ஓர் உறவுக்காரர் வீட்டு விழாவில் நாம் மொய் எழுதினால் அவர் நம் வீட்டு விழாவில் மொய் எழுதவேண்டும் என்பது நம்மூரில் பலராலும் தொடர்ந்து காப்பாற்றப்படும்  மரபு. அடிப்படையில் மொய்யுறவு என்பது ஒரு reciprocal  relation. மேலே வரையறை படித்தால், நம்மூர் மொய்யின் பொருளைக் கொஞ்சம்  நீட்டலாம் என்று தோன்றுகிறது, மொய் அன்ன என்பது போல் கொள்க. அன்ன என்ற உவமை உருபு தொக்கலாம். தவறில்லை. அப்படிப் பார்த்தால், 

mutual = மொய், மொய்ம்பு

mutual respect = மொய் மதிப்பு (நான் மதிப்புக் கொடுத்தால், எனவே நீயும் மதிப்புக் கொடு.)

mutual friend = மொய்த் தோழர் (எனக்கும் தோழர், எனவே உனக்கும் தோழர்) 

mutual fund = மொய்ம்பு நிதி.

mutually attractive = மொய்யாய் ஈர்க்கும்படி (எனக்கும் ஈர்ப்பு, எனவே உனக்கும் ஈர்ப்பு) 

mutually exclusive = மொய்யாய் விடுக்கும்படி (எனக்கு விடுப்பு, எனவே உனக்கும் விடுப்பு) 

mutually interactive = மெய்யாய் இடையாற்றும்படி. (நான் இடையாற்றுகிறேன், எனவே நீயும் இடையாற்று,)

"programming language and scripting languages are not mutually exclusive terms" இதைத் தமிழில் எப்படிச்சொல்லலாம்?

நிரல் மொழியும்,  எழுதுவிப்பு மொழியும், மொய்ம்பாக விடும்படியான தீர்மங்கள் இல்லை 

(இந்த மொய்யுறவின் ஒரு பகுதியார் பங்காளிகள். நம் தந்தைவழிச் சொத்துரிமையாளர், இன்னொருவர் சுற்றத்தார் இதில் தந்தை வழியில் சொத்துரிமை உறவில்லா எல்லோரும், தாய்வழிச் சுற்றத்தாரும் அடங்குவர். சொத்துரிமைச் சட்டங்கள் இன்று மாறிவிட்ட்ன என இது பற்றிப் பேசினால் குழப்பமே.)

Monday, February 12, 2024

க(/சி)ல்லிகம் - silicon

 silica (n.) என்பது "hard silicon dioxide," 1801 - ஐக் குறிக்கும். இது Latin silex (genitive silicis) "flint, pebble," என்ற சொல்லால் எழுந்தது. silica என்ற சொல் alumina, soda போன்ற சொற்களைப் போல் ஆகாரமிட்டு எழுந்தது. siica வின் வேர் சில் என்பது தான். "flint, pebble." 

கல்லுதலும் சில்லுதலும் குறுத்தல், சிறுத்தல் பொருள் கொண்டவை. ஒரு பாறையில் இருந்து குல்லி>குத்தித் தெறிக்க வைத்துக் கிடைப்பதைக் குல்>கல் என்றும், இன்னொன்றைச் சில் என்றும் சொல்வார். கல்லும் சில்லும் எப்படி தமிழிய மொழிகளுக்கும், இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் பொதுவான வேர்களாயின என்பது வேறு புலம். ஆயினும் அவற்றைப் பொது வேர்கள் என்று சொன்னால் ஏற்க மறுக்கும் மொழியியலாளர் உலகில் மிகுதி. குறிப்பாகத் தமிழறியாது, அதற்கு முயற்சியும் செய்யாது சங்கத மயக்கத்தில் இழைந்து, தமிழ் முன்மையைக் கேலிசெய்யும் மேலை மொழியியலார் மிகுதி. ”ஏதோ இந்தையிரோபியத்தையும் தமிழியத்தையும் ஒன்று சேர்த்துப் பார்க்கவே கூடாது” என்பது போல் racial thinking இல் பேசுவோரும் உள்ளார்.    

எல்லாப் பாறைகளிலும் சில்லும் போது சில்லுகளும், குருனைகளும் (grains) கிட்டும். மண், மணல், களி போன்றவற்றில் சில் போன்ற குருனைகளே உள்ளன. மள்> மண் என்பது சில்கள்/கல்கள் செறிந்தது அதாவது அவற்றின் அடர்த்தி அல்லது திணிவு (density) கூடியது. மண்ணில் கொஞ்சம் ஈரமும் இருக்கும். மணல் என்பது செறிவு, அடர்த்தி, திணிவு இல்லாதது. கல்>கள்>களி என்பது ஈரம் கூடிக் குழைந்து போன நிலை.  

silica வில் இருந்து பிரித்தெடுத்த silicon மாழையைச் கல்லிகம் அல்லது சில்லிகம் எனலாம்.  

silicon valley = க(/சி)ல்லிக விளை. விளை என்ற சொல் valley க்கு இணையாய் நெல்லை, குமரி மாவட்டங்களில் உண்டு. அருவி இருக்க நீர்வீழ்ச்சி படைத்தது போல் விளை இருக்க யாரோ ப்ள்ளத்தாக்கு படைத்துள்ளார்.